Saturday, May 16, 2009

உணர்வு மிக்கவன் தமிழன்

உணர்வு மிக்கவன் தமிழன்
திரை நடிகர்களின் உண்ணாவிரதமும்
பொதுக்கூட்டமும்தான்
தமிழனின் உணர்வினை உசுப்பேற்றும்
உடனே பொங்கியெழுவான்
அதன் பின் தான்
அது காவிரிப்பிரச்சனையா
ஒக்கனேக்கல் பிரச்சனையா
இராமேஸ்வரப் பிரச்சனையா
ஈழத்தமிழனின் பிரச்சனையா என்பதையே
தெரிந்துகொள்ளும் அளவிற்கு
உணர்வு மிக்கவன் தமிழன்

அந்த பொங்கியெழும் உணர்வையும்
வந்த நடிகன் வராத நடிகனை சொந்த வெறுப்பு ஏதுமின்றி
வராத காரணத்திற்க்கே ஏசுவதிலும்
நடிகர் சங்கம் தயாரிப்பாளச்சங்கதினை ஏசுவதிலும்
மூன்று மாதங்களாய்ப்புனிதக்காதல் புரிந்து பிரிந்த
நடிகையுடன் சேர்ந்தமர்ந்த நடிகன் பேசியது
எந்த சொப்புபோட்டு குளிச்ச என்றா ?
எத்தன ரவுண்டு அடிச்ச என்றா ? என பத்திரிகைகள் நடத்தும்
பரிசுக்கேள்விக்கு பதில் எழுதுவதிலும்
நேரடி ஒளிப்பதிவிலும் அரசியல் ஆதாயம் தேடும்
நேர்மையான தொலைக்காட்சிகளில் எதை நம்புவதென்பதிலும்
குழம்பிப்போய்

எதற்கு பொங்கிஎழுந்தோம் ? என்பதையே மறந்து
கரைவேட்டியிலும் நூறு இருநூறுகளிலும் வாழ்வை மேம்படுத்த
கட்சிகளிடம் கைநீட்டியதற்கு நன்றிக்கடனாய்
வாக்கு விற்றப்பணத்தில் மண்ணைவாரித்தன் தலையில்
வைத்துக்கொண்டான் உணர்வு மிக்கத்தமிழன்

இனி தமிழன் எந்த நாட்டிலும் கொல்லப்படமாட்டான்
அடிவாங்கமாட்டான் ஏனென்றால்
இந்தியா இருக்கிறது
தமிழனுக்கு நீதிகிடைக்காத நாடுகளுக்கு
பணஉதவியும் ஆயுத உதவியும் செய்ய
இறையாண்மை மிக்க நாடு
எங்கள் இந்தியா

Saturday, May 9, 2009

தமிழனாகப்பிறந்தவன்

உண்ணா நோன்பிருந்து உலகையே குலுங்க வைக்கும் வல்லமையும் சிங்கள அரசின் ஈழத்தமிழின கருணைக்கொலைகளை தடுக்கும் ராஜத்தந்திரமும் தமிழனைத்தவிர வேறு யாருக்கு இருக்கும்

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள உண்ணா நோன்பும்
ஆட்சியைப்பிடிக்க தமிழ் ஈழம் பெற்றுத்தருவேன் என்ற வாக்குறுதியும் போதாதா தமிழனின் வலிகளை ஆறச்செய்ய

விரைவில் இலங்கையில் இன விடுதலை பெறுவோம்
இங்குள்ளத்தமிழின அரசியல் தலைவர்கள் வழியில்
தேர்தல் வருகிறதல்லவா ?

தமிழனின் உயிர்களை விற்று வாக்கு வாங்கும் அரசியல் வியாபாரிகளே
இனி உங்கள் வாரிசுகள் குடிக்கும் தண்ணீரில் எங்கள் இரத்தமும் உண்ணும் உணவில் எங்கள் சதையும் கலந்திருக்கும்

வாழ்க தமிழ் நாட்டு அரசியல்
வாழ்க இந்திய ஜனநாயகம்

Monday, April 13, 2009

தமிழ் புத்தாண்டு ! !

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் சொல்லிக்கொல்லாமல்,கொண்டாட்டம் கொஞ்சமுமில்லாமல் சாதாரண நாளாகிப்போன சித்திரை முதல்நாளுக்கு என் இறங்கல் வாழ்த்துக்கள் ...

தமிழுக்கென்று தனியொரு புத்தாண்டு நாளில்லாமல் தைப்பொங்கலா தமிழ்ப்புத்தாண்டா என அடையாளம்காண முடியாமல் போய்விடும் நிலை வரும், இனிவரும் தலைமுறைகள் எப்போதோ சித்திரையில் முதல்நாளன்று புத்தாண்டு கொண்டாடிஇருக்கிறான் தமிழனென மீண்டும் இந்த நாளையே ஆண்டு முதல்நாளாக கொண்டாட வேண்டுமென வேண்டுகிறேன்.

தெலுங்கு வருடப்பிறப்பு ஆங்கில வருடப்பிறப்பையும் கூட ஆட்சியிலிருந்தால் மாற்றலாம் அதற்கு அந்த உணர்வுமிகுந்த சமூகத்தினரும் அனுமதிப்பார்களோ இல்லையோ,
ஆனால் தமிழா நீ நன்றியுணர்வோடு அனுமதித்ததில் பேரானந்தம்.

Thursday, April 9, 2009

ஆட்சியாளர்கள் உன் ஊழியர்களே உன் கடவுள்கள் அல்ல

தேர்தல் என்பது ஆட்சிசெய்யும் ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதுதானேயொழிய
கண்ணை மூடிக்கொண்டு செய்யும் தவமல்ல
தவப்பலனுண்டோ இல்லையோ உன் வாக்குக்குப்பலமுண்டு
சிந்தனை செய் உனக்குமட்டும்தான் அந்த திறணுண்டு
மனிதனுக்குமட்டும்தான் ஆறறிவென்று மார்தட்டிக்கொண்டால்மட்டும் போதாது
ஆறாமறிவுதனை உபயோகிக்கவேண்டும் இல்லையென்றால்
உதவாக்கரைகளை ஆட்சியில் உட்காரவைக்கும் உதவாக்கரையாகிவிடும் மதிப்புமிக்க உன் வாக்கு

Thursday, April 2, 2009

நாட்டையாளும் உனக்கு

இந்தியாவில் உனக்கென்ன உரிமையும் அங்கிகாரமும் கிடைத்துவிட்டதென்று நீ இலங்கைத்தமிழனுக்கு குரல்கொடுக்கக்கிளம்பிவிட்டாய்..? காவிரியாகட்டும், ஒக்கனக்கல்லாகட்டும், கிருஷ்ணாவாகட்டும், முல்லை பெரியாறாகட்டும், இந்திய மீனவ எல்லையாகட்டும் எதில் உனக்கு உரிமை கிடைத்துவிட்டதென்று நீ எல்லாவற்றையும் மறந்து ஆட்சியாளர் தேர்தலுக்கு தயாராகிவிட்டாய் ? விரலுக்கு மையிடும்முன் உன் விழியை மூடியிருக்கும் மையைத்துடைத்தெறி..